கத்தாரில் ஒரு சாதனை
சுட்டெரிக்கும் பாலைவனத்தில் #இயற்கை #விவசாயம் செய்து சாதித்து வரும் #கத்தார் பற்றி சமீபத்திய பதிவுகளில் எழுதியிருந்தேன்.
ஒருமுறை சாதிப்பது எல்லாம் சாதனையே இல்லை... சாதித்துக் கொண்டே இருப்பதுதான் சாதனை!
அண்டை நாடுகளால் தரை மற்றும் வான் வழிப் போக்குவரத்துத் தொடர்பு முற்றிலும் மூடப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளான கத்தார், சோர்ந்து சோம்பி உட்கார்ந்து விடவில்லை.
எவரையும் சார்ந்து கையேந்தி இராமல், இரவு பகலாக கடுமையாக உழைத்து விவசாயம், உணவு உற்பத்தி, தொழில், பொருளாதாரம் என அனைத்திலும் தற்சார்பு வாழ்வியலைப் புகுத்தி மாற்றி அமைத்தது.
அதன் ஒரு படியாக, 12 சதுர கி.மீ பரப்பளவில் சீரான இடைவெளியில் ஒரு லட்சம் மரங்களை வளர்த்து, பாலைவனத்தின் நடுவே அடர்ந்த காட்டை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறது.
என்னது? சுட்டெரிக்கும் பாலைவனத்திற்கு நடுவே மனிதன் உருவாக்கிய காடா? விளையாடாதீங்க தம்பி.... காட்டு மரங்களுக்கு நீர் ஆதாரம் வேணுமே?
அதெல்லாம் திட்டமிடாமலா? ஆம்! 280,000 சதுர மீ. பரப்பளவில் மிகப் பெரிய ஏரிகளை வெட்டி அதில் அரிதாகப் பெய்யும் மழை நீர் சேமிக்கப் பட்டுள்ளது. அத்துடன், நகரத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் நிலையம் ஒன்றை அருகிலேயே அமைத்து, அதிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீர் தானியங்கி முறையில் தொடர்ச்சியாக மரங்களுக்குச் செல்ல வழி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து பரவலாக்க இருக்கும் இச் சாதனையை மக்களுக்கு, குறிப்பாக சிறார்களுக்கு விளக்கும் வண்ணம் ஏரிகளை ஒட்டி பூங்கா மற்றும் படகு சவாரிகளுடன் கூடிய ஏராளமான #Oasis picnic spots களை அழகாக அமைத்திருக்கிறார்கள்.
நீர் நிறைந்த ஏரிகளும், அடர்காடுகளும் சர்வதேச அளவில் பறவைகளுக்கு ஏற்கனவே தூது விட ஆரம்பித்து விட்டன.
அனைத்து இயற்கை வளங்களும் நிரம்பப் பெற்ற நம் #இந்தியா, பல்வேறு சுரண்டல்களால் மெல்ல பாலைவனமாக மாறிக் கொண்டிருக்கும் வேளையில்...
நிஜ #பாலைவனம் இங்கே #சோலைவனம் ஆகிக் கொண்டிருக்கிறது.
Comments
Post a Comment