அஜித் நடித்துள்ள ஆரம்பம் திரைப்படம் 100 கோடி இந்திய ரூபா வசூலினை நெருங்கியுள்ளதாக சினிமா ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் விஷ்னுவர்த்தன் இயக்கத்தில் அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்பஸி உள்ளிட்டோர் நடிப்பில் ஆரம்பம் திரைப்படம் கடந்த 31ஆம் திகதி உலகம் முழுவதும் 22 நாடுகளில் வெளியானது. இதன் மூலம் தமிழ்படமொன்று அதிகூடிய நாடுகளில் வெளியான திரைப்படம் என்ற பெருமையை ஆரம்பம் பெற்றது.
விளம்பரங்களில் அஜித் பங்குகொள்ளாவிட்டாலும் அவரது ரசிகர்கள் அப்படத்தினை பெரியளவில் விளம்பரப்படுத்தி அஜித்தின் பெரிய ஓப்பனிங்கை மிகப்பெரிதாக்கினர். இதனால் முதல் வாரத்தில் 50 கோடியினை வசூலித்தது.
அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் அனைத்து இடங்களிலும் எந்திரன், விஸ்வரூபம் படங்களுக்கு அடுத்த படியாக வசூலை வாரிக்குவித்துள்ளது.
தீபாவளிக்கு வெளியான ஏராளமான திரையரங்குகளில் வெளியான ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படம் ரசிகர்களைத் திருப்திப்படுத்தத் தவறியது. இதனையடுத்து ஆரம்பம் மற்றும் விஷாலின் பாண்டிய நாடு படங்களுக்கான திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டன.
இதேவேளை தமிழ்நாட்டில் பெருவாரிய திரையரங்குகளை இவை கைப்பற்ற புதிய படங்களும் திரையிடப்படவில்லை. இதனால் 3ஆவது வாரமாகவும் ஆரம்பம் வசூல் ஈட்டுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே சுமார் 91.63 கோடி ரூபா வசூலித்துள்ளது. இதனால் விரைவில் 100 கோடி ரூபா வசூலினை ஆரம்பம் படம் பெற்றுவிடும்.
தமிழ்சினிமாவில் எந்திரன் மற்றும் சிவாஜி (உரிமைகளையும் சேர்த்து) படங்களே இதுவரையில் 100 கோடி ரூபா வசூலினைப் பெற்றுள்ளது. இந்த வரிசையில் அஜித்தின் ஆரம்பமும் விரைவில் இணைந்துவிடும் என்பதை சினிமா ஆய்வாளர்கள் பலரும் கூறுகின்றனர்.
Comments
Post a Comment