கோமாளி மேர்வின் சில்வாவினால் முஸ்லிம் சமூகத்தினருக்கும் பாதிப்பு, சர்வதேசத்தில் இலங்கைக்கும் அவப்பெயர்: வேலாயுதம்
கோமாளி மேர்வின் சில்வாவினால் முஸ்லிம் சமூகத்தினருக்கும் பாதிப்பு, சர்வதேசத்தில் இலங்கைக்கும் அவப்பெயர்
அன்று அரசர்கள் நாட்டை ஆட்சி புரியும் போது அவையில் அரச கோமாளிகள் இருப்பது போன்று இன்றைய அரசாங்கத்தின் அமைச்சரவையிலும் கோமாளி இருக்கின்றார்கள். அவர்களில் ஒருவர் தான் அமைச்சர் மேர்வின் சில்வா. ஒரு சிரேஷ்ட அமைச்சர் என்ற வகையில் இவரின் செயற்பாடானது சர்வதேசத்தில் இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதோடு முஸ்லிம் சமூகத்தினரையும் பாதிப்படைய செய்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் உதவித் தவிசாளரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான கே. வேலாயுதம் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இஸ்லாமியர்களுக்கு நான்கு திருமணம் முடிக்க முடியும் என்றால் பௌத்தன் என்ற வகையில் எனக்கும் அந்த உரிமை உள்ளது. அந்தவகையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா. மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளைக்கு விருப்பம் என்றால் உடனடியாக நான் திருமணம் செய்துகொள்கின்றேன் என ஊடகங்களுக்கு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருந்தார்.
இவருடைய கருத்தானது முஸ்லிம் சமூகத்தினரது கலாசாரத்தை இழிவுப்படுத்துவதாக அமைந்துள்ளதோடு சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் அமைச்சரவையில் உள்ளவர்களுக்கு ஐம்பதிலும் ஆசை வரும் என்பதைப் போல ஐ.நா. ஆணையாளரை கண்டவுடன் இவருக்கும் இந்த ஆசை வந்துள்ளது.
நாட்டின் தேசிய பிரச்சினை தொடர்பாக ஆராய விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரை திருமணம் செய்ய விரும்புகின்றேன் என கூறியிருக்கு அமைச்சர் மேர்வின் சில்வாவை அரசாங்கம் உடனடியாக கண்டிக்க வேண்டும்.
அமைச்சர் மேர்வின் சில்வா ஆடிய கூத்துக்கள் ஏராளம். அரசாங்க அதிகாரிகளை மரத்தில் கட்டிப் போட்டமை என இது போன்ற ஏராளமான கூத்துக்களை செய்தவர் இவர். இவருடைய இவ்வாறான செயற்பாடால் இலங்கையின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுகின்றது என்றார்.
Comments
Post a Comment