முஸ்லிம்களுக்கு எதிராக அண்மையில் 33 சம்பவங்கள் இடம்பெற்ற பின்பும் அரசாங்கம் மௌனம் காக்கிறது. அரசு இப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்காது. என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய அங்கத்தவர்கள் சேர்த்துக் கொள்வதற்காக அக்குறணை நகரில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
அக்குறணை பிரதேசம் கண்டி மன்னரால் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டதாகும். போர்த்துக்கேயர்கள் அக்குறணை வழியாகக் கண்டிக்குச் செல்ல முயற்சித்த போது அக்குறுணையில் அவர்களைத் தடுத்து வைத்து தாமதப்படுத்தி கண்டி மன்னனுக்கு விடயத்தை அறிவித்துள்ளனர். இதன் காரணமாக புத்தரின் புனித தந்தத்தை ஹங்குரங்கெத்த பிரதேசத்துக்குக் கொண்டு சென்று பாதுகாத்துக் கொள்ள முடிந்தது.
இன்று முஸ்லிம்களுக்கு எதிராக சில சக்திகள் களத்தில் இறங்கி உள்ளன. அரசாங்கம் இதனைப் பார்த்துக்கொண்டு மௌனம் காக்கிறது. நான் இதைப் பற்றிப் பாராளுமன்றத்தில் பேசிய போது என்னைக் குற்றம் கூறுகின்றனர். ஹசன் அலி எம்.பி. பொய் சொல்வதாகக் கூறுகின்றார்கள். அவர் பொய் சொன்னால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். அப்படி எதுவும் செய்யாமல் மக்களை ஏமாற்றுகின்றனர்.
ஹலால் சான்றிதழ் சம்பந்தமாக முஸ்லிம்களுக்கு இடையேயும் ஒத்த கருத்து இல்லை. சிலர் ஹலால் சான்றிதழை உலமா சபை வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர். மற்றும் சிலர் அரசாங்கம் வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர். இன்னும் சிலர் இது தேவை இல்லை என்றும் கூறுகின்றனர். எனவே இது ஒரு குறிப்பிட்டக் குழுவின் பிரச்சினையாக உருமாற்றப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் எதிர் நடவடிக்கை காரணமாக முழு முஸ்லிம் சமுதாயமும் பாதிக்கப்படுவதை எம்மால் அனுமதிக்க முடியாது.
ஹலால் சான்றிதழ் வழங்கும் பிரச்சினை சம்பந்தமாக எழுந்துள்ள பதற்ற நிலையை சுமுகமாக முடிவுக்குக் கொண்டு வர அரசுக்கு முடியும். முஸ்லிம்களுக்கு எதிராக அநுராதபுரத்தில் இடம்பெற்ற சம்பவத்தின் போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இப்பிரச்சினை இவ்வளவு தூரம் சென்றிருக்காது. தற்போது இப்பிரச்சினை பெரிதாகியுள்ளது. அரசு இப்பிரச்சினைக்குத் தீர்வு காணாது என்பதையே இந்த நிலைமை எடுத்துக் காட்டுகிறது.
தற்போதைய அரசாங்கத்தை மாற்றாமல் எதுவுமே செய்ய முடியாது. அதற்காகத்தான் கிராம மட்டத்தில் எமது அங்கத்தவர்களைப் பலப்படுத்தி 2014 ஆம் ஆண்டில் தேர்தல் ஒன்றைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இதன் மüம் மட்டுமே இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.
Comments
Post a Comment