
ஆரம்பம், முழுக்க முழுக்க அஜித் ஷோ. ‘சால்ட் அண்ட் பெப்பர்’ தலை முடி, அதேபோன்ற தாடி மீசை, கூலிங் கிளாஸ், ஸ்டைலான நடை, மெல்லிய முறுவல், அலட்டிக் கொள்ளாத உடல் மொழி, அசராத வில்லத்தனம், அவ்வப்போது உதிர்க்கும் பஞ்ச் வசனங்கள் என்று அஜித் எதைச் செய்தாலும் தியேட்டரில் தூள் பறக்கிறது. மங்காத்தாவில் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்த அஜித்துக்கு மீண்டும் அப்படிப்பட்ட வேடம்.
எந்த இணையதளத்தின் சர்வரிலும் நுழையத் தெரிந்த ஜித்தன் அர்ஜுனைக் கடத்தி வந்து அவன் காதலி அனிதாவை (தப்ஸி) கொல்வதாக மிரட்டி, அவனை வைத்து அஷோக் - மாயா கூட்டணி ஏகப்பட்ட நாச வேலைகளைச் செய்கிறது. இடையில் உள்துறை அமைச்சர், அவருக்கு நெருக்கமான தொழிலதிபர், அவர்கள் கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கொள்ளும் ஆடிட்டர் என்று இன்னொரு கண்ணியும் ஓடுகிறது. ஏகப்பட்ட குண்டுகள் வெடிக்கின்றன. சுவிஸ் வங்கிக் கணக்குகள் அலசப்படுகின்றன. சிறையில் இருக்கும் பயங்கரவாதியைப் பற்றிப் பேச்சு வருகிறது. இந்த வன்முறைகள், அஷோக், அமைச்சர், சுவிஸ் வங்கி ஆகியவற்றுக்கு இடையே என்ன தொடர்பு என்ற கேள்விக்கான விடை இடைவேளைக்குப் பிறகு வரும் ஃப்ளாஷ் பேக்கில் தெரிகிறது.
அடுத்தடுத்த காட்சிகளை யூகிக்க இயலாத வண்ணம் அமைத்திருக்கிறார் விஷ்ணுவர்த்தன். அஜித் வில்லனாகத் தோன்றும்போது அவருக்கு ஒரு பின் கதை இருப்பது தெரிந்துவிடுவதால் அதில் பெரிய சுவாரஸ்யம் ஏற்படவில்லை என்றாலும் கதையை நகர்த்திக்கொண்டு போகும் விதம் சுவாரஸ்யமாக உள்ளது.
கதையைச் சொல்லும் விதமும் காட்சிகள் எடுக்கப்பட்ட விதமும் சராசரி மசாலா படங்களிலிருந்து மேம்பட்டதாக உள்ளன. இருப்பினும் அஜித் குழுவினர் நினைத்தையெல்லாம் நினைத்த மாத்திரத்தில் செய்ய முடிவது நம்பும்படி இல்லை.
தாடி மீசை இல்லாமல் வரும் அஜித்தை விட நரைத்த தாடி, மீசையுடன் வரும் அஜித்தே வசீகரிக்கிறார். கிளாமர் தவிர்த்த நயன்தாராவிடம் அழகும் மிடுக்கும் வெளிப்படுகின்றன. சண்டைக் காட்சிகளில் துடிப்பும் வேகமும் காட்டுகிறார். அடக்கி வாசிக்கும் ஆர்யா இயல்பாக நடிக்கிறார். புத்துணர்ச்சியுடன் தோற்றமளிக்கும் தப்ஸியும், ஆர்யாவும் படத்திற்கு இளமையும் கலகலப்பும் சேர்க்கிறார்கள். கிஷோர், ராணா டக்குபதி ஆகியோரின் நடிப்பு குறிப்பிட்டுச் சொல்லும்படி இருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்தோடு அழகாகப் பொருந்துகிறது.
ஊழலால் பாதிக்கப்படும் கடமை வீரர் அதற்கு எதிராகத் தொடுக்கும்போர்தான் ஆரம்பம். அலுப்பூட்டாமல் கதை சொல்லியிருப்பதாலும் நடிகர்களைத் திறமையாகப் பயன்படுத்தியிருப்பதாலும் படம் பார்க்கும்படி இருக்கிறது.
விமர்சனக் குழு தீர்ப்பு:
மசாலா பட ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் கதையை எடுத்த விதத்தில் வித்தியாசம் காட்டி எல்லாத் தரப்பினரையும் ரசிக்க வைக்கிறார் இயக்குநர்.
Comments
Post a Comment